போக்சோ மற்றும் லஞ்ச ஊழல் வழக்கில் இடைநீக்கம் செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடாது என்று மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது .
அரசு ஊழியர்கள் லஞ்ச , ஊழல் வழக்குகளில் சிக்கினால் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தியுள்ளது . இந்நிலையில் பேரூராட்சிகளில் எத்தனை பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எத்தனை பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற கேள்விகளை பேரூராட்சிகள் ஆணையத்திடம் ஆர் . பெரியசாமி என்பவர் எழுப்பியிருந்தார் .
இதேபோல் போக்சோவில் கைதான நபர்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது . இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரியான பதில் தரவில்லை என்று கூறப்படுகிறது .
இதையடுத்து மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது . இந்த வழக்கு மாநில தகவல் ஆணையர் எஸ் . முத்துராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது . வழக்கு விசாரணையின் இறுதியில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார் .
லஞ்ச வழக்குகள் , போக்சோ சட்டங்களின் கீழ் நடவடிக்கைக்கு ஆளாகும் அரசு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்படும் காலத்தில் அவர்களுக்கு முதல் 90 நாட்களுக்கு 50 சதவீத சம்பளம் பிழைப்பூதியம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது .
90 ல் இருந்து 180 நாட்கள் வரை மாத சம்பளத்தில் 75 சதவீதமும் , 180 நாட்களுக்கு பின்னர் முழு சம்பளமும் வழங்கப்படுகிறது . உதாரணமாக , பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் , 6 ஆண்டுகள் பிழைப்பூதியம் பெற்றுள்ளார் .
பின்னர் அவருக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது . இவ்வாறு நீதிமன்றத்திலும் , துறை ரீதியான விசாரணையிலும் கால தாமதம் ஏற்படுகிறது . இதுபோன்ற வழக்குகளில் பிழைப்பூதியம் என்பது அரசுக்கு பெரும் நிதிச்சுமையாக மாறிவிடுகிறது .
எனவே ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் அரசு ஊழியர்கள் மீது தொடரப்படும் குற்ற வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை துறை ரீதியான விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் .
குற்றம் செய்தவர்களுக்கு அவர்கள் இடைநீக்க காலத்தில் பிழைப்பூதியம் வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் . இதற்காக தமிழ்நாடு சம்பளம் மற்றும் பிழைப்பூதிய சட்டம் மற்றும் பணி தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.