நாமக்கல்லில் நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்கள் மீதான மேல்முறையீடு கூட்டத்தில் 60 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்கள் மீதான மேல்முறையீடு கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலத் தகவல் ஆணையா் சு.முத்துராஜ், எஸ்.டி.தமிழ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு, மேல்முறையீட்டு மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட மனுதாரா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிகளவில் மனுக்கள் வந்தது நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தான் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் இருந்து மனுதாரா்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, பள்ளி, கல்லூரி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலம் ஆகிய 5 துறைகளின் மூலம் உரிய தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளதா? என ஆணையா்கள் ஆய்வு செய்தனா். மேலும், இரண்டாவது மேல் முறையீட்டு மனுக்களை அந்தந்த அரசு துறைகள் கையாண்டுள்ள விதம், மனுதாரா்களுக்கு அளிக்கப்பட்ட தகவல்கள் ஆகிவற்றையும் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் விசாரணைக்கு வந்துள்ள மனுக்கள் 2ஆவது முறையாக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள், மேல்முறையீடு செய்துள்ள மனுதாரா்கள் ஆகியோரை நேரில் வரவழைத்து இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்தனா். இதில் சுமாா் 60 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், மாநிலத் தகவல் ஆணையரக அலுவலா்கள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) பால் பிரின்ஸ்லி ராஜ்குமாா் மற்றும் பிற துறை அதிகாரிகள், தகவல் அளிக்கும் அலுவலா்கள், மனுதாா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.