தெரு நாய்களுக்கு வெறி பிடிக்கும் அபாயம் மருந்து கலந்து உணவில் தர உத்தரவு


சென்னைசென்னையில் தெரு நாய்களுக்கு வெறி பிடிக்கும் அபாயம் இருப்பதால், அவற்றுக்கு உணவுடன் மருந்து கலந்து கொடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட 171வது வார்டு பகுதியில், வெறி பிடித்த நாய்களால் மக்கள் துன்புறுகின்றனர். அவற்றை பிடித்து சிகிச்சை அளித்து, அது தொடர்பான தகவலை வழங்க வேண்டும்.
மேலும், தெற்கு கேசவ பெருமாள் புரம் பிரதான சாலை மற்றும் பசுமை வழிச் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கோரியிருந்தார்.
அவரது மேல் முறையீட்டு மனுவை, மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் விசாரித்தார். விசாரணை முடிவில், அவர் பிறப்பித்த உத்தரவுகள்:
பொதுவாக தெரு நாய்கள் கடிப்பதில்லை. வெறி பிடிக்கின்ற நாய் தான் பெரும்பாலும் மனிதர்களை கடிக்கின்றன. எனவே, தெரு நாய்களுக்கு வெறி பிடிக்காமல் பார்த்துக் கொண்டாலே, பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.
தற்சமயம் தெரு நாய்களுக்கு கருத்தடை செயவது; நோய் ஏற்பட்டால் மாநகராட்சி மற்றும் ப்ளூகிராஸ் அமைப்பினால், சிகிச்சை அளிக்கப்பட்டு, பிடித்த இடத்திலேயே விட்டுவிடுவது நடைமுறையில் உள்ளது.சென்னையில் மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ள நாய்களுக்கு, மருத்துவம் சார்ந்த பிரச்னைகளை தீர்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. அதேநேரம், தெரு நாய்கள் வெறி நாய்களாக மாறுவதை தடுக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகளை கணக்கிட முடியாது.
எனவே, நாய்களுக்கு தடுப்பூசி போடுவது அல்லது நோய்க்கான மாத்திரை வழங்குவது தான் தீர்வு. நம்மிடம் இருக்கிற கட்டமைப்புகளை வைத்து, நாய்களை பிடித்து வந்து சிகிச்சை அளிப்பதாக இருந்தால், 1 சதவீதத்திற்கும் குறைவான நாய்களுக்கு தான் சிகிச்சை அளிக்க முடியும்.
எனவே, மாற்று ஏற்பாடாக, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை மாணவர்களை வைத்து, சென்னையில் உள்ள, 200 வார்டுகளிலும், நோய் வாய்ப்பட்ட நாய்களுக்கு, உணவுடன் மாத்திரைகள் கலந்து கொடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்கலாம்.
அதேபோல், காட்டு விலங்குகளுக்கு ஊசி செலுத்துவது போல், ஊசி போடுவது போன்ற நடைமுறையை பின்பற்ற முடியுமா என்பது குறித்து நடவடிக்கை எடுக்கலாம்.இவற்றிற்காக, கால்நடை மருத்துவ பல்கலையுடன் கலந்து ஆலோசித்து, சென்னை மாநகராட்சி நகர்நல அலுவலர், கால்நடை மருத்துவ அலுவலர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை இயக்குனர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரத்தை, ஒரு மாதத்திற்குள் மனுதாரருக்கு தகவலாக வழங்க வேண்டும்.
மேலும், முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலையில், அமைச்சர்களை சந்திக்க வருவோர், கபாலீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்திற்கு வருவோர், தெற்கு கேசவ பெருமாள்புரம் சாலையில் வாகனங்களை நிறுத்துகின்றனர்.
இதை தவிர்க்க, அப்பகுதியில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான காலி நிலத்தில், தற்காலிக கட்டண வாகன நிறுத்தம் ஏற்படுத்தினால், வாகன நிறுத்தம் தொடர்பான பிரச்னை முடிவுக்கு வரும்.
இது தொடர்பாக முடிவு எடுத்து, எடுக்கப்பட்ட நடவடிக்கையை, 30 நாட்களுக்குள் மனுதாரருக்கு தகவலாக, கபாலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வழங்க வேண்டும்.
அதேபோல், அப்பகுதியில் பழுதடைந்து நிற்கும் வாகனங்களை அகற்றுவது தொடர்பாக, மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர், சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.

Leave a Reply