சென்னை-‘பாரம்பரிய கட்டடத்தின் அருகில், அடுக்குமாடி கட்டுமான திட்டம் மேற்கொள்ளும்போது, அறிவிப்பு பலகை வைக்காததால், அப்பகுதி தனியார் பள்ளி மாணவர்கள் 7,908 பேருக்கு, தலா 1,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ என, சி.எம்.டி.ஏ.,வுக்கு, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பாரம்பரிய கட்டடங்கள் பட்டியலிடப்பட்டு, அவற்றை பாதுகாப்பதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி, பாரம்பரிய கட்டடங்களின் அருகில் புதிய அடுக்குமாடி கட்டுமான திட்டங்களை அனுமதிக்கும்போது, பல்வேறு நடைமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், செட்டிநாடு இல்லம் அருகில், 14 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டுமான திட்டத்துக்கு சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளித்துள்ளது.
இக்கட்டடத்தால், அருகில் உள்ள பாரம்பரிய கட்டடம், தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து, முருகேஷ் உள்ளிட்ட சிலர் தகவல் அறியும் உரிமை சட்டப்படி, சி.எம்.டி.ஏ.,வில் தகவல் கேட்டிருந்தனர்.
சி.எம்.டி.ஏ., உரிய பதில் அளிக்காததால், மனுதாரர்கள் மேல் முறையீடு செய்தனர்.இதிலும் தகவல் சரிவர கிடைக்காததால், மனுதாரர்கள், மாநில தகவல் ஆணையத்தில் இரண்டாவது மேல் முறையீடு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த, மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் பிறப்பித்த உத்தரவு: பாரம்பரிய கட்டடங்களை பாதுகாக்கும் பொறுப்பு, சி.எம்.டி.ஏ.,வுக்கு உள்ளது. இந்த பொறுப்பை கவனத்தில் கொள்ளாமல், அதன் அருகில், 14 மாடி கட்டடம் கட்ட, எந்த அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டது என்பதில், சி.எம்.டி.ஏ., சரியாக பதில் அளிக்கவில்லை. கட்டுமான திட்டம் அருகில், அது தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்காதது ஏன் என்ற கேள்விக்கும், அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்ற கேள்விக்கும், சி.எம்.டி.ஏ., அதிகாரிகளின் பதில் திருப்திகரமாக இல்லை.
இந்த வழக்கு, ஜூன் 16ல் விசாரணைக்கு வரவுள்ளதை அறிந்து, அதற்கு முதல் நாள் அவசரகதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகளின் செயல்பாடு, திருப்திகரமாக இல்லை.எனவே, மனுதாரர் கூறியபடி, இந்த புதிய கட்டுமான திட்டத்தால், அதன் அருகில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுக்கு உரிய விபரங்கள் தெரிவிக்காமல் மறுக்கப்பட்டுள்ளது உறுதியாகிறது.
எனவே, அந்த தனியார் பள்ளியில் பயிலும், 7,908 மாணவர்களுக்கும் தலா, 1,000 ரூபாய் என, மொத்தம் 79.08 லட்சம் ரூபாயை இழப்பீடாக, சி.எம்.டி.ஏ., வழங்க வேண்டும்.தற்போதைய சூழலில், ‘ஆன்லைன்’ பணப் பரிமாற்றம் பரவலாக அதிகரித்துள்ளதால், முதன்மை கல்வி அலுவலருடன் ஆலோசித்து, இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதைச் செயல்படுத்தி உரிய அறிக்கையை ஜூலை 28க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.