சென்னையில் வெறி நாய்களாக மாறும் தெரு நாய்கள்: உணவுடன் மருந்து வழங்க மாநில தகவல் ஆணையம் உத்தரவு

சென்னை: சென்னையில் தெருநாய்கள் வெறிநாய்களாக மாறுவதைத் தடுக்க நோய்வாய்ப்பட்ட நாய்களுக்கு உணவுடன் மருந்தையும் சேர்த்து வழங்க வேண்டுமென சென்னை மாநகராட்சி மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட 171-வது வார்டில்உள்ள தெரு நாய்கள் வெறி நாய்களாக மாறி குழந்தைகள் உட்படபலரை கடித்து வருவதாகவும், எனவே அந்த வெறி நாய்களைபிடித்து சிகிச்சை அளித்து முறையாக தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என வினோத்குமார் என்பவர் சென்னை மாநகராட்சி மண்டலம்-3 மருத்துவ அலுவலருக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் 15 கேள்விகளுக்கு பதிலளிக்க கோரியிருந்தார்.

அதற்கு உரிய பதில் கிடைக்காததால் அவர் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் முன்பாக நடந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர், கால்நடை மருத்துவ அலுவலர், கால்நடை மருத்துவ பல்கலை. இயக்குநர், மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையர், மனுதாரர் வினோத்குமார் ஆஜராகியிருந்தனர்.

அப்போது மாநகராட்சி தரப்பில், சென்னையில் வெறிநாய் தொல்லை அதிகரித்து வருவதாக புகார் வந்தால் அந்த நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து தடுப்பூசியும் போடப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் பிறப்பித்துள்ள உத்தரவில், “சென்னையில் நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலை உள்ளி்ட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

தெருநாய்கள் வெறிநாய்களாக மாறுவதை தடுக்காவிட்டால் பிரச்சினையின் தீவிரம் அதிகரித்துவிடும். ஆனால் வெறி நாய் கடித்து சிகிச்சைக்கு செல்லும் பொதுமக்களுக்கு தமிழக அரசு அதிக அளவில் செலவு செய்கிறது. எனவே தெருநாய்களுக்கு உரியநேரத்தில் கருத்தடை செய்வது, நோய்க்கான தடுப்பூசி போடுவது, நோய் வாய்ப்பட்ட நாய்களுக்கு வெறிநாய் தடுப்பு மருந்துகளையும் உணவுடன் சேர்த்துவழங்குவது போன்ற நடைமுறைகளை அதிகாரிகள் கடைபிடித்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

எனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழத்தில் பயிலும் இளங்கலை மற்றும்முதுகலை, ஆராய்ச்சி மாணவர்களைக் கொண்டு நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களுக்கு உணவுடன் கலந்து மருந்து, மாத்திரைகள் வழங்குதல், தடுப்பூசி செலுத்துதல் போன்ற நடைமுறைகளை சென்னை மாநகராட்சியும், கால்நடை மருத்துவ பல்கலைக்கழகமும் மேற்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

Leave a Reply